சொல்லாயோ வாய் திறந்து

வியாழன், 12 நவம்பர், 2009


சொல்லாயோ வாய் திறந்து
இனியவளே !
நீ பிரகாசமானவள்
ஆதலால் நீ
என்னோடு இருப்பாய் என
கனவு கண்டேன் - இப்போது
எல்லாமே கானல் நீராக…..

அப்போதெல்லாம்,
கட்டி அணைக்கையிலே
காதுக்குள் மெல்லக்
கதை பேசுவாயே
முத்தங்கள் பொழிய நினைத்தால்
முத்தத்தால் எனை நனைப்பாயே
இப்போது எங்கே எனைவிட்டுப் பிரிந்தாய் ?

என்மார்பில் எகிறிக் குதித்து
கைகளால் தடவி தனத்தில்
முகம் புதைத்து சிணுங்குவாயே
தட்டினால், வெட்கம் மேலிட
கண்களை மூடிக் கெஞ்சுவாயே
இதையெல்லாம் மறந்து, இறந்து போக
உன்னால் எப்படி முடிகிறது ?

உனது முத்தச் சத்தங்களால்
என் உயிருக்குள்
உனைப் போன்று
ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறேன்….
எனக்குள் நீ வாழ்வதாய் நினைத்து.

என் அன்புக்குரிய
சின்ன மழலையே… செல்ல மகளே…..
மீண்டும் - என் கருப்பையினுள்
கருவாகிப் பிறப்பெடுத்து
“அம்மா” என்று
சொல்லாயோ வாய் திறந்து.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக