பறவையொன்று
கொலை செய்யப்பட்டிருக்கிறது
முகம் சிதைக்கப்பட்டு
இறக்கைகள் கிழிக்கப்பட்டு
கால்கள் உடைக்கப்பட்டு
குருதி சிந்திய நிலையில்
கொலைசெய்யப் பட்டிருக்கிறது.
பட்டப்பகலில்
இனந்தெரியாதவர்களால் நிகழ்த்தப்பட்டதாக
சொல்கிறார்கள்
வன்முறையின் அதிகபட்ச வெறியை காரணமின்றி
அந்த உயிரின்மீது இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
துப்பாக்கிகளுக்கு கரம்கூப்பி
இறந்துபோன உறவுக்காக
பறவைகள் மௌனமாய் அழுகின்றன
ஒரு அப்பாவிப் பறவையின் உயிருக்கு
அதன் விருப்பின்றி விடுதலையளித்து
மரணத்தை நியாயப்படுத்தி
கூடுகளைத் தாங்கும் கிளைகளை முறித்து
எல்லாவற்றையும் கடாசிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அராஜக புருசர்கள் வெறிப்புன்னகையில்
வன்முறைகளும் ஆதிக்க வெறிகளுமே தெரிகிறது.
இவர்களுக்கு எப்படித்தெரியும்
எங்களது கண்ணீரும் வலியும்?